மொன்றியல்-ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில் தொடர்ச்சியாகச் சொகுசு கார்களைத் திருடி வந்த கும்பலைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவருக்கு, மொன்றியல் நீதிமன்றம் 40 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
மொன்றியலின் கோட்-டெ-நேஜ் (Côte-des-Neiges – CDN) பகுதியைச் சேர்ந்த இவர், ஒரு பாரிய குற்றச் செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இந்த இளைஞர் மற்றும் அவரது குழுவினர், விமான நிலையத்தின் நீண்டகால வாகன தரிப்பிடங்களில் (Long-term parking) நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் விலையுயர்ந்த கார்களையே இலக்கு வைத்துள்ளனர்.
இவர்கள் சாவியில்லாமல் இயங்கும் கார்களின் சிக்னல்களைக் கையாளும் நவீன கருவிகளைப் (Signal Jammers) பயன்படுத்தி, சில வினாடிகளிலேயே கார்களைத் திருடி வந்துள்ளனர். திருடப்பட்ட கார்கள் உடனடியாக மொன்றியல் துறைமுகம் ஊடாக மேற்குஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்குக் கப்பல் மூலம் கடத்தப்பட்டுள்ளன. 2024-ஆம் ஆண்டு இறுதியில் புராஜெக்ட் O-X (Project O-X) என்ற பெயரில் மொன்றியல் பொலிஸார் நடத்திய பாரிய தேடுதல் வேட்டையில் இந்த இளைஞர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சோதனையின் போது, சுமார் 2.3 மில்லியன் டொலர் மதிப்புள்ள 19 சொகுசு கார்களைப் பொலிஸார் மீட்டிருந்தனர். திருடப்பட வேண்டிய கார்களை அடையாளம் காண்பது மற்றும் அவற்றை இரகசியக் கிடங்குகளுக்கு ஓட்டிச் செல்வது ஆகியவையே இந்த இளைஞரின் முக்கிய பணியாக இருந்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி, பொதுமக்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோருக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனக் கூறி 40 மாதச் சிறைத் தண்டனையை வழங்கினார்.
இவ்வாறான திருட்டுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, தற்போது மொன்றியல்-ட்ரூடோ விமான நிலையத்தில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, நவீன கண்காணிப்பு கமராக்களும்
பொருத்தப்பட்டுள்ளன. வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகள், விமான நிலையத்தில் வாகனங்களை நிறுத்தும் போது ஸ்டீயரிங் லாக் (Steering wheel locks) மற்றும் ஜூபிஎஸ் (GPS trackers) கருவிகளைப் பயன்படுத்துமாறு, மொன்றியல் பொலிஸார் மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர்.
