கியூபெக் மாகாணத்தில் இரண்டு முக்கிய கல்விச் சங்கங்கள் கியூபெக் ஒம்புட்ஸ்மேன் (Quebec Ombudsman) அலுவலகத்தில் முறையான முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளன.
கியூபெக் மாகாண அரசு கல்வித் துறைக்குத் தேவைப்படும் நிதி அளவைக் குறைத்துள்ளமை மற்றும் கல்வித் துறைக்குத் தேவையான ஊழியர்களைப் பணிக்கமர்த்துவதை நிறுத்தியமை தொடர்பாகவே இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கியூபெக் மாகாண அரசின் இந்த நடவடிக்கைகள் மாணவர் சேவைகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று, கல்விச் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்த ஒரு விசாரணையைத் தொடங்குமாறு கியூபெக் ஒம்புட்ஸ்மேனிடம் அந்த சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
கியூபெக் ஒம்புட்ஸ்மேனின் விசாரணை அதிக காலத்தை எடுத்துக் கொள்ளும் என்ற போதும் “கூடுதல் அழுத்தத்தைப் பிரயோகிக்க” இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்வது அவசியம் என்று, Fédération du personnel de soutien scolaire இன் தலைவர் எரிக் ப்ரொனோவோஸ்ட் தெரிவித்துள்ளார்.
கியூபெக் ஒம்புட்ஸ்மேன் என்பது பொது சேவைகளைப் பயன்படுத்தும் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு சுதந்திரமான மற்றும் பக்கச்சார்பற்ற அமைப்பாகும்.
கியூபெக் அரசாங்க நிறுவனங்கள் மற்றும் சுகாதார மற்றும் சமூக சேவைகள் துறைகளில் உள்ள முறைப்பாடுகளை விசாரித்து, பிழைகள் மற்றும் அநீதிகளை சரிசெய்வதற்கான பரிந்துரைகளை வழங்கும் அதிகாரத்தை, கியூபெக் ஒம்புட்ஸ்மேன் கொண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.