கியூபெக் மாகாணத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான புதிய தங்குமிடங்கள் அமைப்பதில், சிக்கல்நிலை ஏற்பட்டுள்ளது.
நெருங்கிய உறவு வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான புதிய தங்குமிடங்கள் அமைப்பதற்கான அனுமதி ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது.
எனினும் கியூபெக் மாகாண அரசுக்கும் கனேடிய மத்திய அரசுக்கும் இடையிலான அதிகாரத்துவக் கோரிக்கைகளில் ஏற்பட்ட முரண்பாடுகளால், இந்த திட்டங்களுக்கான நிதிகள் இரத்து செய்யப்படுதல் அல்லது அச்சுறுத்தலுக்கு உள்ளாகுதல் போன்ற நிலைமைகள் உருவாகியுள்ளன.
அத்தியாவசியமான இந்த உதவிச்செயற்பாடுகள் முடங்குவதால், பாதிக்கப்படும் பெண்களுக்கான ஆதரவு கேள்விக்குறியாகியுள்ளது.
பெண்களுக்கான தங்குமிடங்களின் வலையமைப்பான Alliance MH2 இன் அரசியல் விவகார ஒருங்கிணைப்பாளர் கான்ஸ்டன்ஸ் லோரின் (Constance Laurin) இதுகுறித்து கருத்துரைக்கையில், ” நெருங்கிய உறவு வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான புதிய தங்குமிடங்கள் அமைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்நிலை, அநீதியானது” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே நிதி ஒப்புதல் பெற்று கட்டுமானத்திற்குத் தயாராக இருந்த இரண்டு தங்குமிடத் திட்டங்களுக்கான நிதி இப்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் லோரின் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்காக திட்டமிடப்பட்ட இந்த தங்குமிடங்கள் மொன்ட்ரியல், கட்டினோ (Gatineau), லாரன்ஷியன்ஸ் (Laurentians), அபிட்டிபி-டெமஸ்காமிக் (Abitibi-Témiscamingue) மற்றும் சாடியர்-அப்பலாச்சஸ் (Chaudière-Appalaches) ஆகிய பகுதிகளில் அமைக்கப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
