நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் உள்ள நியூ ரோஸ் (New Ross) பகுதியில் இயங்கி வந்த எல்.ஈ. எலியட் லம்பர் (L.E. Elliott Lumber) என்ற மரம் அறுக்கும் ஆலை ஒன்று நேற்று (வியாழக்கிழமை) மாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் முற்றாக எரிந்து அழிந்துள்ளது.
இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை.
நியூ ரோஸ் தன்னார்வ தீயணைப்புத் துறையின் தீயணைப்பு வீரர் ப்ரைஸ் கெட்டி (Bryce Keddy) தகவலின்படி, மாலை 5 மணியளவில் தீ விபத்து குறித்த தகவல் கிடைத்துள்ளது.
கென்ட்வில்லி (Kentville), செஸ்டர் பேசின் (Chester Basin) மற்றும் வெஸ்டர்ன் ஷோர் (Western Shore) ஆகிய பகுதிகளிலிருந்து வந்த தீயணைப்புப் படையினரின் உதவியுடன், மொத்தம் நான்கு தீயணைப்புத் துறையினர் நியூ ரஸ்ஸல் வீதியில் (New Russell Road) உள்ள இந்த ஆலையில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது, ஆலை முழுவதும் தீப்பிழம்புகளால் சூழப்பட்டிருந்ததாகவும், கட்டுக்கடங்காமல் தீ பரவியிருந்ததாகவும் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த தொண்டர் எய்டன் கிளமென்ட் (Aiden Clement) கூறியுள்ளார்.
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாகத் தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.