டொராண்டோவில் நடந்த ஒரு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பான வழக்கில் அடையாளம் காணப்பட்ட மூன்று குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் திகதி அன்று, டொராண்டோவில் நடந்த ஒரு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 12 வயது சிறுவன் டான்டே செபாஸ்டியன் ஆண்ட்ரேட்டா (Dante Sebastian Andreatta) உயிரிழந்தார்.
அச்சம்பவத்தில், மேலும் மூவர் காயமடைந்தனர்.
இக்குற்றச்செயல் தொடர்பான வழக்கிலேயே, தற்போது குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணையில், ரஷான் சேம்பர்ஸ் (Rashawn Chambers), ஜஹ்வேய்ன் ஸ்மார் (Jahwayne Smart), மற்றும் சிஜே ஹோப்ஸ் (Cjay Hobbs) ஆகியோர், முதல் நிலைக் கொலை மற்றும் ஐந்து கொலை முயற்சி முதலான குற்றச்சாட்டுகளில், குற்றவாளிகள் என, அடையாளம் காணப்பட்டனர்.
இந்நிலையில், ஒன்டாரியோ உயர் நீதிமன்ற நீதிபதி ஜோன் பாரெட் (Joan Barrett) நேற்றையதினம், இந்த மூவருக்கும் முதல் நிலை கொலைக் குற்றத்திற்காக 25 ஆண்டுகளுக்கு பிணையில் வெளிவர முடியாத ஆயுள் தண்டனையை விதித்தார்.
அத்துடன், ஐந்து கொலை முயற்சி குற்றச்சாட்டுகளுக்காகவும் தலா ஐந்து ஆயுள் தண்டனைகளை அவர் விதித்தார்.
தண்டனைக்கான காரணங்களை விளக்கிய நீதிபதி பாரெட், இக்குற்றத்தின் தீவிரத்தை தண்டனை பிரதிபலிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த தண்டனைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் அனுபவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.