யாழ்ப்பாணம், சாவகச்சேரி சரசாலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள “ஆறுதல் – வாழ்வு நிறைவுப் பராமரிப்பு இல்லம்” இன்று சனிக்கிழமை சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கனகன்புளியடிச் சந்திக்கு அருகிலுள்ள ஐந்து சந்திப் பகுதியில் அமைந்துள்ள இந்த இல்லத்தின் திறப்பு விழாவில், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வாழ்வின் இறுதிக்கட்டத்தில் உள்ளவர்களுக்கும், புற்றுநோய் உள்ளிட்ட குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆறுதல், வலிநிவாரண மருத்துவப் பராமரிப்பு மற்றும் சமூக ஆதரவை இலவசமாக வழங்குவதே இந்த இல்லத்தின் முக்கிய நோக்கமாகும்.
சுமார் 1.2 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பராமரிப்பு நிலையத்தில், 20 தனி அறைகள், மருத்துவ வசதிகள் மற்றும் பூங்காக்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, ஆதரவற்ற நிலையில் வாழும் நோயாளிகள் கண்ணியத்துடனும் மனநிம்மதியுடனும் தமது வாழ்வின் இறுதிக்கட்டத்தைக் கழிப்பதற்கான சூழலை உருவாக்குவது இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாயகத்தின் மீதான பற்றுடன் செயற்படும் ஏழு நிறுவுநர்கள் உள்ளிட்ட 13 பேர் கொண்ட நம்பிக்கை நிதியத்தினால் இந்த நிலையம் நிர்வகிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

