மன்னார் நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உணவு தயாரிப்பு மற்றும் கையாளுதல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்களில் இன்று விசேட சுகாதாரப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மன்னார் நகர சபை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் இணைந்து இந்தச் சோதனைகளை மேற்கொண்டனர்.
இதன்போது, உணவு தயாரிக்கும் இடங்களில் ஈக்களின் நடமாட்டம், எலிகளால் உணவுகள் மாசடையும் அபாயம், சுகாதாரமற்ற உணவுச் சேமிப்பு, உரிய அனுமதிகள் மற்றும் பணியாளர்களுக்கான மருத்துவ அறிக்கைகள் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும், பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தாமை, அசுத்தமான பாத்திரங்களில் உணவுகளைச் சேமித்தல் மற்றும் சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துதல் போன்ற முறைகேடுகளும் அவதானிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகளை மீறிய நிறுவனங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், உணவு தயாரிப்பு நிறுவனங்கள் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

