மொன்றியல் பெருநகரப் பகுதியில் குப்பை மற்றும் கழிவு சேகரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் நிறுவனம், மாநகரசபையின் ஒப்பந்த விதிகளை மீறிச் செயல்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கழிவுகளைச் சேகரிக்கும் நேரம், வாகனப் பராமரிப்பு மற்றும் ஒப்பந்த நிபந்தனைகளைப் பின்பற்றுவதில் அந்த நிறுவனம் அலட்சியம் காட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொன்றியல் நகரின் பல பகுதிகளில் கழிவு அகற்றும் சேவைகளை வழங்கி வரும் குறித்த நிறுவனம், நிர்ணயிக்கப்பட்ட நேர அட்டவணையைப் பின்பற்றத் தவறியதால், குடியிருப்புப் பகுதிகளில் கழிவுகள் தேங்கிக் கிடப்பதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பொதுச் சந்தை ஒப்பந்தங்களின் கீழ் மாநகரசபைப் பணிகளை மேற்கொள்ளும்போது பின்பற்றப்பட வேண்டிய வெளிப்படைத்தன்மை மற்றும் சட்ட விதிகளுக்கு மாறாக, இந்நிறுவனம் செயற்பட்டுள்ளது.
குறிப்பாக, முறைகேடுகள் மற்றும் முறையற்ற நடைமுறைகள் காரணமாக மொன்றியல் மாநகரசபையால் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுத் தடைவிதிக்கப்பட்ட ஒரு துணை ஒப்பந்த நிறுவனத்தின் சேவைகளையும், உபகரணங்களையும் இந்த நிறுவனம் மறைமுகமாகப் பயன்படுத்தியமை விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து கவனம் செலுத்தியுள்ள மொன்றியல் மாநகரசபை அதிகாரிகள், ஒப்பந்த நிபந்தனைகளை மீறும் நிறுவனங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
சேவை குறைபாடுகள் தொடரும் பட்சத்தில், ஒப்பந்த ஒப்பந்த விதிமுறைகளின் கீழ் நிறுவனத்திற்கு நிதி அபராதம் விதிக்கப்படலாம் அல்லது எதிர்கால ஒப்பந்தங்களிலிருந்து விலக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது.


