கியூபெக் மாகாணச் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஆரம்பித்துள்ள நிலையில், அம்மாநிலத்தின் ஐந்து முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களும் நேற்றைய தினம் தமது இறுதிக்கட்டப் பிரசார நடவடிக்கைகளை நிறைவுசெய்துள்ளனர்.
தொடர்ச்சியாக எட்டு ஆண்டுகள் கியூபெக் மாகாணத்தில் ஆட்சி செலுத்திவரும் ‘கூட்டணி அவெனீர் கியூபெக்’ (CAQ) கட்சிக்குப் பதிலாக, மாநிலத்தில் புதிய மாற்றத்தைக் கொண்டுவர மக்கள் தயாராகிவிட்டதாக முதன்மை எதிர்க்கட்சியான ‘பார்ட்டி கியூபெக்வா’ (PQ) நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
கருத்துக் கணிப்புகளில் முன்னிலையில் இருக்கும் பார்ட்டி கியூபெக்வா கட்சியின் தலைவர் போல் செயிண்ட்-பியர் பிளமண்டன், மாண்ட்ரியால் பிராந்தியத்தில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இத்தேர்தல் கியூபெக் மாகாணத்தில் ஒரு தீர்க்கமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்ட அவர், தீர்மானிக்கப்படாத வாக்காளர்களை தம்பக்கம் ஈர்ப்பதற்கு, பார்ட்டி கியூபெக்வா கட்சித் தொண்டர்கள் கடைசி நேரத்திலும் தீவிரமாக உழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
ஆட்சிக்கு வந்த முதல் 100 நாட்களில் வீடற்றோர் பிரச்சினைக்கான சிறப்புப் வரவுசெலவுத் திட்டம், எரிபொருள் வரி குறைப்பு மற்றும் பயன்படுத்தப்பட்ட பொருட்களுக்கான வரி நீக்கம் ஆகியவற்றை நிறைவேற்றுவதாக அவர் உறுதியளித்துள்ளார்.
அதேவேளை, பார்ட்டி கியூபெக்வா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கியூபெக் மாகாணத்தைப் கனடாவிலிருந்து பிரிப்பதற்கான தனிநாடு தொடர்பான பொதுவாக்கெடுப்பை நடத்தும் என்ற அச்சத்தை ஏனைய கட்சிகள் வாக்காளர்கள் மத்தியில் தீவிரமாக வெளிப்படுத்தி வந்தமை குறிப்பிடத் தக்கது.

