கியூபெக் மாகாணத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் பிரெஞ்சு மொழிக்கு முதலிடம் வழங்குவதற்கான சட்டவிதிமுறைகளை அரசு மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
வணிகங்கள் தங்கள் மொழிப்பயன்பாட்டினை மாற்றிக்கொள்ள வழங்கப்பட்டிருந்த மூன்று ஆண்டு கால அவகாசம், தற்போது இரண்டு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.
கியூபெக் மாகாணத்தின் Bill 96 மசோதாவின் கீழ், பொது இடங்களில் பிரெஞ்சு மொழியின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக, கியூபெக் மாகாண அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
இதற்கு முன் 2028-ஆம் ஆண்டு வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூன் 2027-ஆம் ஆண்டுக்குள் அனைத்து நிறுவனங்களும் புதிய விதிகளுக்கு மாற வேண்டும் என, மொழி விவகார அமைச்சர் ஜான்-பிரான்சுவா ராபெர்ஜ் அறிவித்துள்ளார்.
ஒரு நிறுவனத்தின் வர்த்தகப் பெயர் ஆங்கிலத்தில் இருந்தாலும், அதனுடன் இடம்பெறும் பிரெஞ்சு மொழி விளக்கம் அல்லது வாசகங்கள், ஆங்கிலத்தை விட இரண்டு மடங்கு பெரியதாகவும், தெளிவாகத் தெரியும் வகையிலும் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
