சுமார் 300 மில்லியன் கனேடிய டொலர்கள் செலவிடப்பட்ட பின்னரும் தோல்வியில் முடிந்த தேசிய அளவிலான மின்-மருந்துக் குறிப்பு (e- prescriptions) திட்டத்தை, கியூபெக் மாகாண அரசு தனியாகப் பொறுப்பேற்றுச் செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
கூட்டாட்சி அமைப்பான ‘கனடா ஹெல்த் இன்ஃபோவே’ (Canada Health Infoway) நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாகக் கைவிடப்பட்ட ‘பிரிஸ்கிரைப்- ஐடி’ (PrescribeIT) திட்டத்தை, கியூபெக் மாகாணம் முழுவதும் உள்ள 1,900 சில்லறை மருந்தகங்களுக்கும் விரிவுபடுத்துவதற்கான 4 ஆண்டு கால ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
கியூபெக் சுகாதாரத் துறை அமைச்சரின் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ‘சாந்தே கியூபெக்’ (Santé Québec) தலைவர் ஜெனீவீவ் பிரொன் (Geneviève Biron) மற்றும் ‘கனடா ஹெல்த் இன்ஃபோவே’ அமைப்பின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி அபி கல்ரா (Abhi Kalra) ஆகியோருக்கு இடையே இந்த உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம் ‘பிரிஸ்கிரிப்ஷன் கியூபெக்’ (Prescription Québec) என்ற பெயரில் இத்திட்டம் மாகாணத்தில் மறுஜீவன் பெறுகிறது. நாடு முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருந்தகங்களை தொலைநகல் (Fax) பயன்பாட்டிலிருந்து டிஜிட்டல் முறைக்கு மாற்றும் நோக்கில், 2017ஆம் ஆண்டு ‘பிரிஸ்கிரைப்-ஐடி’ திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் சுமார் 300 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்ட போதிலும், நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களில் 5
சதவீதத்திற்கும் குறைவானவர்களே இத்திட்டத்தைப் பயன்படுத்தினர்.
ஒவ்வொரு மின்-மருந்துக் குறிப்பைப் பெறும்போதும் மருந்தகங்களிடம் கட்டணம் வசூலிக்கும் வர்த்தக மாதிரியே (Pricing model) இத்திட்டத்தின்
பின்னடைவுக்கு முதன்மை காரணமாக அமைந்தது. பெரும்பாலான மருந்தகங்கள் கூடுதல் கட்டணம் செலுத்த விரும்பாமல் பாரம்பரிய தொலைநகல் முறையையே தொடர்ந்தன.
இதன் காரணமாகக் கடந்த மே மாதம் 29ஆம் திகதி இத்திட்டத்தை தேசிய அளவில் நிறுத்துவதாகக் கனடா ஹெல்த் இன்ஃபோவே அறிவித்தது.
எனினும், கியூபெக் அரசு இத் தொழில்நுட்பத் தோல்வியை நிராகரித்து, அதன் வர்த்தக மாதிரியை மட்டும் மாற்றியமைத்துள்ளது.
மருந்தகங்கள் மீது சுமத்தப்பட்ட கட்டண முறையை முற்றாக நீக்கிவிட்டு, திட்டத்திற்கான அனைத்து இயக்கச் செலவுகளையும் கியூபெக் மாகாண அரசே ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

