இஸ்ரேலுடன் கொண்டுள்ள அனைத்து வகையான உத்தியோகபூர்வ மற்றும் நிறுவன ரீதியான உறவுகளையும் இடைநிறுத்த வேண்டும் என வலியுறுத்தி, மொன்றியல் மாநகர சபையில் தாக்கல் செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய தீர்மானம், திருத்தங்களுக்குப் பின்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானம் திருத்தப்படுகையில், “இஸ்ரேலுடனான உறவுகளைத் துண்டிக்கும் சரத்து” நீக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீன மக்களுக்கும் போரினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் மொன்றியல் நகரம் தனது ஆதரவையும் அனுதாபத்தையும் தெரிவிப்பதாக திருத்தப்பட்ட புதிய தீர்மானம் 54-6 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மொன்றியல் மாநகர சபையின் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியான ‘புராஜெக்ட் மொன்றியல்’ (Projet Montréal) கட்சியினால் இந்த முன்மொழிவு கடந்த ஜூன் மாதம் கொண்டுவரப்பட்டது.
எனினும், மொன்றியல் மாநகர மேயர் சொராயா மார்டினேஸ் ஃபெர்ராடா (Soraya Martinez Ferrada) தலைமையிலான நிர்வாகம் கொண்டுவந்த திருத்தங்களின் அடிப்படையில் இறுதித் தீர்மானம் உருவாக்கப்பட்டது.
இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்த எதிர்க்கட்சித் தலைவரான எரிக்கா அல்னியஸ் (Ericka Alneus), இசுரேலுடனான உறவை இடைநிறுத்தும் சரத்து நீக்கப்பட்டமை குறித்த, தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
எனினும், பாலஸ்தீன மக்களின் துயரத்தை மொன்றியல் மாநகர சபை அங்கீகரித்துள்ளமை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என, அவர் குறிப்பிட்டுள்ளார்.

