மேற்கு மானிடோபா பகுதியில் கடந்த சில வாரங்களாக அச்சுறுத்தி வந்த காட்டுத்தீ அச்சுறுத்தல் தற்போது குறைந்துள்ளதால், லின் லேக் மற்றும் ஃபிளின் ஃப்ளான் நகரங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் விரைவில் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவுள்ளனர்.
தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி தற்காலிக முகாம்களில் தங்கியிருந்த 5,700க்கும் மேற்பட்ட மக்களுக்கு, இது, பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
லின் லேக் நகரம் தங்கள் வெளியேற்ற உத்தரவை ரத்து செய்வதாக வியாழக்கிழமை அறிவித்தது.
இதன்மூலம், வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் குடியிருப்பாளர்கள் வீடு திரும்ப முடியும்.
ஃபிளின் ஃப்ளான் நகரில் உள்ள 5,100க்கும் மேற்பட்ட மக்கள் அடுத்த புதன்கிழமை காலை 9 மணி முதல் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், புதிய தீ விபத்துகள் ஏற்படாத பட்சத்திலும், மீண்டும் நுழையும் திட்டத்தில் எந்தத் தடங்கலும் இல்லாத பட்சத்திலுமே இந்த அனுமதி வழங்கப்படும்.
ஃபிளின் ஃப்ளான் நகரத்தின் துணை மேயர் அலிசன் டல்லஸ்-ஃபங்க் (Alison Dallas-Funk), சமூக ஊடகங்களில் வெளியிட்ட காணொளியில் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.
நகரின் மேயர் மற்றும் கவுன்சில் உறுப்பினர்கள் திங்கட்கிழமை கூடி வெளியேற்ற உத்தரவை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யவுள்ளனர்.
அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் இந்த வார இறுதியில் முழுமையாகச் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
