தனது அரசாங்கப் பாதுகாப்புப் பரிசோதனை (Security Screening) முறைகளை முழுமையாக மீளாய்வு செய்யவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பெல்ஜியத்தில் அமைந்துள்ள நேட்டோ (NATO) அமைப்பின் இராணுவத் தலைமையகத்தில் உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கனடியப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தையடுத்தே, மத்திய அரசு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
பெல்ஜியத்தின் மொன்ஸ் (Mons) நகரில் அமைந்துள்ள நேட்டோ அமைப்பின் ஐரோப்பியக் கூட்டுப் படைகளின் உயர் தலைமையகத்தில் (SHAPE) பயிற்சியாளராக (Intern) பணியாற்றி வந்த பிய்வே ஜாங் (Biwei Zhang) என்ற சீன வம்சாவளி கனடியப் பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார்.
நேட்டோ தலைமையகத்தின் தகவல் தொழில்நுட்ப (IT) பிரிவில் பணியாற்றிய ஜாங், தனது அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட கோப்புகளை அணுக முயன்றதாகவும், தனக்கு அனுமதி இல்லாத பகுதிகளுக்குச் சென்றதாகவும் நேட்டோ பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதன் பின்னரே பெல்ஜிய அதிகாரிகள் aந்தப் பெண்ணைக் கைது செய்து விசாரணைகளை முடுக்கிவிட்டனர்.
உளவு பார்த்தமை மற்றும் குற்றவியல் அமைப்பொன்றில் பங்கேற்றமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பெல்ஜியப் பொலிஸாரால் இவர் மீது கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree), நேட்டோ போன்ற சர்வதேச அமைப்புகளில் கனடியர்கள் நியமிக்கப்படுவதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் பாதுகாப்புப் பரிசீலனைகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பது குறித்து, மத்திய அரசாங்கம் தீவிர விசாரணை நடத்தும் எனத் தெரிவித்துள்ளார்.
கனடியப் பாதுகாப்பு புலனாய்வுச் சேவையின் (CSIS) பாதுகாப்பு மதிப்பீடுகளைத் தொடர்ந்து, சர்வதேச அமைப்புகளில் பணியாற்றும் கனடியர்களுக்குப் பாதுகாப்பு அனுமதி (Security Clearance) வழங்குவது அல்லது ரத்து செய்வது தொடர்பான இறுதி முடிவை மத்திய வெளியுறவு அமைச்சு மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

