வாங்கூவர் தீவின் வேஸ்லி ரிட்ஜ் பகுதியில் பரவியுள்ள காட்டுத்தீ காரணமாக, 390-க்கும் மேற்பட்ட வீடுகளில் வாழும் குடியிருப்பாளர்களுக்கு இடப்பெயர்ச்சி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த இடப்பெயர்ச்சி உத்தரவு, தவிர்க்க முடியாதது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏரிகளின் அருகே படகுகளை இயக்க வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீயை கட்டுப்படுத்த ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் ஆகியவை நீர் எடுப்பதற்காக கேமரன், ஸ்பைடர் மற்றும் ஹோர்ன் ஏரிகளைப் பயன்படுத்தி வருகின்றன.
இந்த ஏரிகளில் பொது மக்கள் படகுகளை இயக்கினால், தீயணைப்பு நடவடிக்கைகள் தாமதமாகலாம் எனவும் விபத்து நேரிடும் அபாயம் உள்ளதெனவும் அதிகாரிகள் கூறினர்.
“தீயணைப்பு விமானங்களும் பொது படகுகளும் ஒரே இடத்தில் சந்திக்கும் சூழல் மிக ஆபத்தானது,” என இடர்-முகாமைத்துவ இயக்குநர் டக்ளஸ் ஹோம்ஸ் எச்சரித்துள்ளார்.
இந்த காட்டுத்தீ, நனையமோவிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கேமரன் ஏரியின் வடக்குக் கரையில் வன்மையாக பரவி வருகிறது.
தற்போதைய மதிப்பீட்டின் படி, 389 ஹெக்டேயர் நிலப்பரப்பில் தீப்பரவல் ஏற்பட்டு உள்ளது.
இந்த காட்டுத்தீ மனித செயலால் உருவானதாகவும் சந்தேகிக்கப்படுகின்றது.
நனையமோ பிராந்திய நிர்வாகம் (RDN) அறிவித்ததின்படி, 393 வீடுகளின் குடியிருப்பாளர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், 238 வீடுகள் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


