ஆபாச இணையத்தளங்களில் ஒன்றான ‘போன்ஹப்‘ (Pornhub) இன் தாய் நிறுவனமான ‘அய்லோ‘ (Aylo), சிறுவர் பாலியல் துஷ்பிரயோக வீடியோக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 120 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக வழங்கச் சம்மதித்துள்ளது.
இந்நிறுவனம் மொன்றியல் நகரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகின்றது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் அலபாமா மாநிலங்களில் தொடரப்பட்ட இரு பிரதான கூட்டு நஷ்டஈட்டு வழக்குகளை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் இந்த ஒப்பந்த மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட பெண்களால் தொடரப்பட்ட இந்த வழக்குகளில், அவர்கள் சிறுமிகளாக இருந்தபோது அவர்களின் சம்மதமின்றி எடுக்கப்பட்ட பாலியல் காணொளிகள் ‘போன்ஹப்‘, ‘யூபோன்‘ (Youporn) மற்றும் ‘ரெட்டியூப்’ (Redtube) போன்ற இணையதளங்களில் பதிவேற்றப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், தனது முன்னாள் காதலனால் அவரது அறிவின்றி பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள், “பழிவாங்கும் ஆபாசமாக” (Revenge Porn) இணையதளத்தில் பதிவேற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிறுவனம் இத்தகைய விதிமீறல்களை நன்றாகத் தெரிந்து கொண்டே அனுமதித்துள்ளதாகவும், அதன்மூலம் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டியதாகவும் மனுதாரர்கள் குற்றம் சாட்டினர்.
அய்லோ நிறுவனம் தன் மீதான குற்றச்சாட்டுகளைத் தொடர்ச்சியாக மறுத்து வருகிறது. எனினும், நீதிமன்ற ஒப்பந்தத்தின்படி இழப்பீட்டுத் தொகையை இந்நிறுவனம் பாதிக்கப்பட்டோருக்குச் செலுத்தவுள்ளது.
அத்துடன், அய்லோ நிறுவனம் தங்களின் இணையதளங்களில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்கள் மற்றும் சம்மதமற்ற ஆபாசக் காணொளிகள் பதிவேற்றப்படுவதைத் தடுக்கக் கடுமையான புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவும் ஒப்புக்கொண்டுள்ளது.

