ஒன்ராறியோ மாகாணத்தில், எதிர்க்கட்சியான லிபரல் கட்சியின் அடுத்த தலைவரைத் தெரிவு செய்வதற்கான முதலாவது நேரடி விவாதம், பிராம்ப்டன் (Brampton) நகரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.
ஒன்ராறியோ லிபரல் கட்சியின் புதிய தலைவரைத் தெரிவு செய்யும் இந்தப் போட்டியில் களமிறங்கியுள்ள ஐந்து வேட்பாளர்களும், சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து தமது கொள்கைகளை முன்வைத்தனர்.
இருப்பினும், ஒன்ராறியோ லிபரல் கட்சியின் அடுத்த தலைவருக்கு மாகாண சபையில் (Legislature) ஆசனம் இருப்பது அவசியமா என்பது குறித்த விவாதம் வேட்பாளர்களிடையே பெரும் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்தியது.
2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒன்ராறியோ மாகாணத்தில் ஆட்சிஅதிகாரத்தை இழந்த ஒன்ராறியோ லிபரல் கட்சி, கடந்த இரண்டு
தேர்தல்களிலும் மூன்றாவது இடத்தையே பெற்றுள்ளது.கடந்த காலங்களில் தலைவர்களாக இருந்த ஸ்டீவன் டெல் டுகா மற்றும்
பொன்னி குரோம்பி ஆகிய இருவருக்கும் மாகாண சபையில் ஆசனம் இல்லாததே கட்சியின் தோல்விக்கு ஒரு காரணம் என விமர்சனங்கள் எழுந்தநிலையில், இந்த விவாதத்தில் அந்த விடயம் மையப்புள்ளியாக மாறியது.
பொன்னி குரோம்பி கடந்த ஜனவரி மாதம் பதவி விலகியதைத் தொடர்ந்து, ஒன்ராறியோ லிபரல் கட்சி தனது புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கத்தயாராகி வருகிறது.
நவம்பர் மாதம் 21 ஆம் திகதி அன்று ஒன்ராறியோ லிபரல் கட்சியின் புதிய தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளார்.
தற்போதைய மாகாண அரசாங்கத்தின் மீதான அதிருப்தி அதிகரித்துள்ள சூழலில், இந்தத் தலைமைத்துவப் போட்டி ஒன்ராறியோ அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

