ஆர்க்டிக் பிராந்தியத்தில் இராணுவத்திற்குச் செயற்கைக்கோள் தொடர்பாடல் சேவைகளை வழங்குவதற்காக டெலிசாட் (Telesat)
நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள 2.3 பில்லியன் டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தின் முழுமையான விவரங்களை வெளியிடுமாறு, பிரதான
எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பிரதமர் மார்க் கார்னிக்கும் (Prime Minister Mark Carney) டெலிசாட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டான் கோல்ட்பர்க்கிற்கும் (Dan
Goldberg) இடையிலான தனிப்பட்ட நட்புறவு காரணமாக, இந்த ஒப்பந்த வழங்கலில் நல்ஒழுக்க விதிகள் (ethics protocols) சரியாகப்
பின்பற்றப்பட்டனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளதை அடுத்து, இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
கன்சர்வேடிவ் கட்சியின் பாதுகாப்பு விமர்சகர் ஜேம்ஸ் பெஸான் (James Bezan) இது குறித்துக் கருத்து தெரிவிக்கையில், பிரதமர் மார்க் காரினிக்கும் டான் கோல்ட்பர்க்கிற்கும் உள்ள நீண்டகால நட்புறவு காரணமாக இந்த ஒப்பந்தம் தீவிரமாக ஆராயப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
ஒப்பந்த தீர்மானங்களின் போது நல்ஒழுக்கக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் பயன்படுத்தப்பட்டனவா? பிரதமர் கார்னி இந்த முடிவெடுக்கும்
செயல்முறைகளில் ஈடுபட்டாரா? அமைச்சரவைக் கூட்டங்களில் இது குறித்த விவாதங்கள் இடம்பெற்றபோது அவர் அதில் பங்கேற்காமல்
விலகியிருந்தாரா?என அவர் கேள்விகளை எழுப்பினார்.
அத்துடன், இத்திட்டத்தின் ஒப்பந்த ஆவணங்கள் மற்றும் நலன் முரண்பாடுகளைத் (conflict of interest) தவிர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட
பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆவணங்கள் உடனடியாகப் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்றும் கன்சர்வேடிவ் கட்சியின்
பாதுகாப்பு விமர்சகர் ஜேம்ஸ் பெஸான் (James Bezan) கோரிக்கை விடுத்துள்ளார்.
இக்குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்துள்ள பிரிவி கவுன்சில் அலுவலகம் (Privy Council Office – PCO), இந்த ஒப்பந்தம் 'பாதுகாப்பு முதலீட்டு முகவரகத்தால் (Defence Investment Agency) உரிய சட்ட விதிமுறைகளுக்கு அமைவாகவே சுயாதீனமாக வழங்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளது.

