மொன்றியல் நகரப் பொலிஸ் திணைக்களத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாகக் கடுமையான அவதூறுகளைப் பரப்பி, சமூக வலைத்தளங்களில் காணொளிகளை வெளியிட்ட குற்றச்சாட்டில் 24 வயதுடைய மொன்றியல்வாசி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக மூன்று குற்றவியல் அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மொன்றியல் நகரைச் சேர்ந்த முகமது பெக்காலி (Mohamed Bekkali) என்பவரே, இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
கடந்த ஜூலை ஆரம்பத்தில் மொன்றியல் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இவர், விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இந்த சந்தேகநபர் கடந்த ஜூன் மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில், மொன்றியல் பொலிஸ் திணைக்களத்தின் (SPVM) மூன்று அதிகாரிகளை இலக்கு வைத்து, அவதூறான தகவல்களையும் கருத்துக்களையும் சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக, கியூபெக் மாகாண அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துக் கருத்து தெரிவித்த மொன்றியல் மேயர் சொராயா மார்ட்டினெஸ் ஃபெர்ராடா (Soraya Martinez Ferrada) ” மொன்றியல் பொலிஸ் அதிகாரிகளுக்கு அளிக்கப்பட வேண்டிய மரியாதை விவாதத்திற்கு அப்பாற்பட்டது என்பதை இந்த நடவடிக்கை தெளிவாகக் காட்டுகிறது” எனக் கூறியுள்ளார்.



