மொன்றியல் மாநகர சபையானது, இஸ்ரேலிய அரசு நிறுவனங்களுடனான தங்களின் உத்தியோகபூர்வ உறவுகள் அனைத்தையும் உடனடியாகத் துண்டிக்க வேண்டும் என்று கோரி, கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை நிறுத்தப்பட்டுள்ளது.
கியூபெக்கின் முன்னணி முற்போக்கு எதிர்க்கட்சியான ‘புரொஜெட் மாண்ட்ரியல்’ (Projet Montréal) இனால், இந்த தீர்மானம் முன்மொழியப்பட்டது.
காசாவில் இஸ்ரேல் நிகழ்த்தி வரும் தாக்குதல்களை ‘இனப்படுகொலை’ (Genocide) எனக் குறிப்பிட்ட அந்தத் தீர்மானம், இஸ்ரேல் நாடு சர்வதேசச் சட்டங்களை மதித்துத் தனது எல்லைகளுக்குத் திரும்பும் வரை, அதனுடனான அனைத்து உறவுகளையும் மொன்றியல் மாநகரம் துண்டித்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியது.
இந்த நிலையில், மொன்றியல் மாநகர மேயர் தலைமையிலான தற்போதைய ஆளும்கட்சி நிர்வாகம் இதற்கு மாற்றாக, “சமூக அமைதி, கலாச்சாரங்களுக்கு இடையேயான உரையாடல் மற்றும் கூட்டு வாழ்வு” என்ற பெயரில் ஒரு மாற்றுத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
இதனையடுத்தே, ‘புரொஜெட் மாண்ட்ரியல்’ கட்சி கொண்டுவந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இரண்டு மாதங்களுக்கு, அதாவது வரும் ஓகஸ்ட் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டது.


