இசைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் ‘டிக்கெட் மாஸ்டர்’ (Ticketmaster) நிறுவனம் மீது தொடரப்பட்ட வழக்கின் மீது, கியூபெக் உயர் நீதிமன்றம் தனது ஒப்புதலை அளித்துள்ளது.
இந்நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் “அத்துமீறிய மற்றும் நியாயமற்ற” சேவைக்கட்டணங்களை (Service Fees) வசூலிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நீதிபதி எலெனி யானாகிஸ் வழங்கிய இந்தத் தீர்ப்பு, கியூபெக் மாகாணத்தில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு, தங்கள் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மொண்ட்ரியலைச் சேர்ந்த பிலிப் மோரல்ஸ் என்பவர் 2022-ஆம் ஆண்டில் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் இசைநிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கியபோது இந்த விவகாரம் பொதுவெளியில் பேசப்பட்டது.
ஒரு சாதாரண இருக்கைக்கும், விலை உயர்ந்த இருக்கைக்கும் டிக்கெட் வழங்கும் “டிஜிட்டல் சேவை” ஒன்று என்ற நிலையே காணப்படுகின்றது.
இந்நிலையில் டிக்கெட்டின் விலையைப் பொறுத்துக் கட்டணத்தை அதிகரிப்பது சட்டவிரோதமானது என வழக்கறிஞர்கள் வாதிடுகின்றனர்.
கனடா மற்றும் அமெரிக்காவில் டிக்கெட் விற்பனையில் ஏகபோக உரிமையைக் கொண்டுள்ள டிக்கெட் மாஸ்டர் நிறுவனத்திற்கு, நீதிமன்றத்தின் தீர்மானம் ஒரு மிகப்பெரிய சவாலாகப் பார்க்கப்படுகிறது.


