கியூபெக் மாகாணத்தில் உள்ள மொந்தெரேஜி (Montérégie) பிராந்தியத்தில், கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று எதிரே வந்த கனரக லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில், காரைச் செலுத்திச் சென்ற வாலிபர் உயிரிழந்தமை குறித்த விசாரணைகள் ஆரம்பித்துள்ளன.
மொந்தெரேஜி பிராந்தியத்தின் சென்-மார்ட்டின் (Sainte-Martine) நகரில் உள்ள ரூட் 138 (Route 138) நெடுஞ்சாலையில், அதாவது சென்-ஜான்-
பாப்டிஸ்ட் வளைவுப் பாதையில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாகக் கியூபெக் மாகாணக் பொலிஸ் பிரிவின் (Sûreté du Québec) ஊடகப் பேச்சாளர் மார்க்டெஸியர் (Marc Tessier) உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, பாதையின் ஒரு திருப்பத்தில் பயணித்துக்கொண்டிருந்த கார் திடீரெனத் தனது கட்டுப்பாட்டை இழந்து,
எதிர் திசையிலிருந்து வந்த கனரக லாரியின் பாதையில் நுழைந்துள்ளது. இதன்போது, எதிர்பாராத விதமாகக் காரும் கனரக லொறியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த கனரக லொரி, வீதியின் அருகே இருந்த குடியிருப்பு வீடு ஒன்றின் மீது மோதி நின்றுள்ளது.
இவ்விபத்தில் காரைச் செலுத்திச் சென்ற இளைஞர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவ அதிகாரிகள்
உறுதிப்படுத்தியுள்ளனர்.
இருப்பினும், கனரக லொறியின் ஓட்டுநரும், லாரி மோதிய வீட்டினுள் இருந்த ஒரேயொரு நபரும் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயங்களுமின்றி
உயிர் தப்பியதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்த இடத்தின் தன்மையைக் கண்டறியவும், விபத்துக்கான துல்லியமான காரணங்களை ஆராயவும் பொலிஸ் தடயவியல் குழுவினர்
களமிறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

