கியூபெக் (Quebec) மாகாணத்தில் உயிரிழப்போரின் உடல்கள் உறவினர்களால் உரிமை கோரப்படாமல் கைவிடப்படும் சம்பவங்களின்
எண்ணிக்கை அண்மைக்காலமாக இருமடங்காக அதிகரித்துள்ளது, அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவினங்கள், இறுதிச் சடங்குச்
செலவுகளைச் செலுத்த முடியாத பொருளாதார நெருக்கடி மற்றும் முதியோரிடையே நிலவும் சமூகத் தனிமைப்படுத்தல் ஆகியவையே
இந்நிலைக்கு முதன்மைப் காரணங்கள் எனத் தெரியவந்துள்ளது.
சாந்தே கியூபெக் (Santé Québec) அமைப்பின் புதிய புள்ளிவிவரங்களின்படி, 2020 ஆம் ஆண்டில் 448 ஆக இருந்த உரிமை கோரப்படாத சடலங்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டில் 992 ஆகவும், தற்போது 1,000-க்கும் அதிகமாகவும் உயர்ந்துள்ளது.
கியூபெக் மாகாணத்தின் மொன்றியல் (Montreal) நகரிலேயே இவ்வாறான சம்பவங்கள் அதிகமாகப் பதிவாகின்ற போதிலும், அண்மைக்காலமாக லோரென்டைட்ஸ் (Laurentians) மற்றும் லானோடியர் (Lanaudière) போன்ற புறநகர்ப் பிராந்தியங்களிலும் இந்நிலைமை கணிசமாக அதிகரித்துள்ளது.
கியூபெக்கில் ஒருவர் இறக்கும்போது, அவரது உடலை உரிமை கோர உறவினர்கள் முன்வரவில்லை என்றாலோ அல்லது பொலிஸாரால்
உறவினர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலோ, கியூபெக் மாகாண அரசு உடலின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, தகனம் மற்றும்
அடக்கம் செய்ய ஈமச்சடங்கு நிறுவனங்களுக்கு (Funeral Homes) அனுமதி வழங்குகிறது.
தற்போது கியூபெக் மாகாண அரசு வழங்கும் இறப்புக்கால நிதியுதவி (Death Benefit) 2,500 டொலர்களாக மட்டுமே உள்ளது. தற்போதைய பணவீக்கச் சூழலில் ஈமக்கிரியைகள் மற்றும் மயானக் கட்டணங்களைச் செலுத்த இந்தத் தொகை எவ்வகையிலும் போதுமானதாக
இல்லை எனலே பெடிட்ஸ் பிரேர்ஸ் (Les Petits Frères) அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி கேத்தரின் ஹேரல் பூர்டன் (Catherine Harel Bourdon)
தெரிவித்துள்ளார்.
எனவே, ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் ஏழை எளிய மக்களின் இறுதிச் சடங்குகளை கண்ணியமான முறையில் மேற்கொள்வதற்கு வசதியாக, இந்த இறப்புக்கால நிதியுதவியை $5,000 டொலர்களாக உயர்த்த வேண்டும் என, கியூபெக் அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

