மொண்ட்ரியல் நகரின் புகழ்பெற்ற யூத உணவகம் ஒன்றின் ஜன்னலில் எழுதப்பட்டிருந்த ‘நோஷ்‘ என்ற பாரம்பரிய வார்த்தைக்கு, கியூபெக் மொழி கண்காணிப்பு அமைப்பு தடை விதித்துள்ளது.
கியூபெக் மாகாணத்தில் அமுலில் உள்ள கடுமையான பிரெஞ்சு மொழிப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், இந்தத் தடை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்த யூத உணவகத்திற்கு கியூபெக்கின் பிரெஞ்சு மொழி கண்காணிப்பு அமைப்பு உத்தியோகபூர்வ எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை அனுப்பியுள்ளது.
கியூபெக்கில் வாழும் ஆங்கிலம் மற்றும் சிறுபான்மைச் சமூகத்தினரை மொழிப் பொலிஸார் திட்டமிட்டுத் துரத்துவது போன்ற உணர்வை இது ஏற்படுத்துகிறது,” என, அந்த உணவகத்தின் உரிமையாளரும் நிறுவனருமான ரீகன் ஸ்டீன்பெர்க் தெரிவித்துள்ளார்.
கியூபெக் அரசின் இந்த நடவடிக்கைக்கு “நோஷ்கேட்” (Noshgate) எனப் பெயரிட்டு, மொண்ட்ரியல் நகரின் முன்னணி உணவக உரிமையாளர்கள், சமையற்கலைஞர்கள் மற்றும் வணிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களின் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நடவடிக்கையை ‘முற்றிலும் கேலிக்குரியது’ என விமர்சித்துள்ள மொண்ட்ரியாலின் சமையல் கலைக் குழுவினர் (Culinary community), பாதிக்கப்பட்ட உணவகத்திற்கு ஆதரவாக நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள தங்களின் கடைகளின் முகப்புகளிலும், கண்ணாடி ஜன்னல்களிலும் ‘Nosh’ என்ற வார்த்தையை எழுதி, புதியதொரு கலாசாரப் புரட்சியைத் தொடங்கியுள்ளனர்.
இந்த சர்ச்சை குறித்து, பிரெஞ்சு மொழி கண்காணிப்பு அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
இம்மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள கியூபெக்கின் புதிய வர்த்தகக் குறியீடு மற்றும் விளம்பரச் சட்டத்தின் படியே, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக, அந்த பிரெஞ்சு மொழி கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.


