‘சோம்டே’ (Chomedey) தொகுதி சுயேச்சை உறுப்பினரான (MNA) சோனா லகோயன் ஒலிவியருக்கு 8,000 டொலர் அபராதம் விதிக்கும் தீர்மானம், கியூபெக் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசாங்கப் பொது நிதியையும் தொகுதி அலுவலக வளங்களையும் தனது அரசியலுக்காகத் தவறாகப் பயன்படுத்தியதாக, அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
கியூபெக் சட்டப் பேரவையின் நெறிமுறைகள் ஆணையாளர் (Ethics Commissioner) சமர்ப்பித்த புலனாய்வு அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்று, அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இந்த அபராத விதிப்பு மற்றும் கண்டன தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கியூபெக் மாகாண லிபரல் கட்சியின் தலைமைத்துவப் போட்டியின் போது, தனது அதிகாரபூர்வப் பணிகளையும் ஊழியர்களையும் கட்சிப் பிரச்சாரத்திற்காக சோனா லகோயன் ஒலிவியர் கட்டாயப்படுத்திப் பயன்படுத்தியிருந்தார்.
மேலும் அதுகுறித்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் திசைதிருப்பவும் முயன்றிருந்தார்.
இந்த தீவிரக் குற்றச்சாட்டுகளின் பின்னணியிலேயே கியூபெக் சட்டப் பேரவை அவருக்கு அபராதம் விதிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
