ஆளும்கட்சியான லிபரல் கட்சியின் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சருமான ஸ்டீவன் கில்போ (Steven Guilbeault) தனது நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பதவியிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகவுள்ளார்.
பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தலைமையிலான தற்போதைய மத்திய அரசு, கனடாவின் பாரம்பரியக் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கொள்கைகளின் முக்கிய தூண்களைத் தொடர்ச்சியாகக் கைவிட்டு வருவதற்கு, கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக, தெரிய வருகின்றது.
மொன்றியல் பிராந்தியத்தின் ‘லோரியர்-செயின்ட்-மேரி’ (Laurier-Sainte-Marie) தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான கில்போ, பிரதமர் மார்க் கார்னியின் நிர்வாகத்துடன் கொண்ட கொள்கை முரண்பாடுகள் காரணமாக ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது மத்திய அமைச்சர் பதவியைத் துறந்திருந்தார்.
குறிப்பாக, அல்பர்ட்டா மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித்துடன் பிரதமர் மார்க் கார்னி மேற்கொண்ட புதிய சக்திசக்தி உடன்படிக்கை (Alberta MOU) மற்றும் தூய்மை மின்சார ஒழுங்குமுறைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் முடிவு ஆகியவற்றிற்கு எதிராகவே கில்போ அமைச்சரவையிலிருந்து வெளியேறினார்.
ஆளும்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு, சுற்றுச்சூழல் நிதியுதவிகள் மற்றும் கார்பன் வரி விதிப்புக் கொள்கைகளில் சமரசம் செய்யக் கூடாது என அவர் மத்திய அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
