மொன்றியலின் நவீன இலகு ரயில் சேவையான REM எதிர்வரும் மே மாதம் 18 ஆம் திகதி முதல் தனது சேவையை மேற்குத் தீவு (West Island) வரை அதிகாரப்பூர்வமாக விரிவுபடுத்தவுள்ளது.
டவுன்டவுன் மொன்றியலில் இருந்து செயின்ட்-ஆன்-டி-பெல்லுவ் (Sainte- Anne-de-Bellevue) வரையிலான இந்த புதிய போக்குவரத்துச் சேவை, அப்பகுதி மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவுள்ளது. 14 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த புதிய பாதையில் நான்கு முக்கிய ரயில் நிலையங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளன.
இந்த விரிவாக்கத்தின் மூலம், REM& ரயில் சேவை வலையமைப்பு மொத்தமாக 23 நிலையங்களுடன் 63 கிலோமீட்டர் தூரத்திற்குத் தனது சேவையை வழங்கவுள்ளது. மேற்குத் தீவுப் பகுதியில் முதன்முறையாக அதிக இடைவெளியின்றித் தொடர்ச்சியாக இயங்கும் (High-frequency) பொதுப் போக்குவரத்துச் சேவை
அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்த ரயில் நிலையங்களுக்கு மக்கள் இலகுவாக வந்து செல்வதற்கு துணை செய்யும் வகையில், STM மற்றும் exo பஸ் சேவைகள் ஏற்கனவே
மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய சேவையினால் மேற்குத் தீவில் இருந்து மொன்றியல் நகரின் மையப்பகுதிக்குச் செல்லும் பயண நேரம் ஆனது, கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நவீன இலகு ரயில் சேவை திட்டத்தின் இறுதிக்கட்டமான மொன்றியல் சர்வதேச விமான நிலையத்திற்கான (YUL Airport) ரயில் சேவையானது, 2027 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
