யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு அமைப்பதற்கு இடைக்காலத் தடையை நீடித்து மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கின்றது. இரண்டு நீதிபதிகளைக் கொண்ட ஆயம் நேற்றைய தினம் வியாழக்கிழமை இந்த உத்தரவை விடுத்திருக்கின்றது.
யாழ். பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு ஒன்றை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த வழக்கைப் பரிசீலித்த யாழ். மாவட்ட நீதிமன்றம், முதலில் அந்தக் கட்டுமானத்துக்கு எதிராக இரண்டு வார கால இடைக்காலத் தடை உத்தரவு ஒன்றை வழங்கி இருந்தது. எனினும் பின்னர் அந்த இரண்டு வார காலம் முடிவடைந்ததும், இடைக்காலத் தடை உத்தரவை நீடிக்காமல் கட்டளையை வழங்கி இருந்தது.
அதற்கு எதிராக மனுதாரர்கள் சார்பில் வடக்கு மாகாண மேன்முறையீட்டுக்கான மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடும், மீளாய்வு முறையீடும் செய்யப்பட்டன. அந்த இரண்டு மனுக்களையும் மேன் முறையீட்டுக்கான மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வாதாடியிருந்தார்.
இந்த விவகாரத்தை ஒட்டி தன்னுடைய கட்டளையை மேன்முறையீட்டுக்கான மேல்நீதிமன்றம் வழங்கி இருக்கின்றது. இந்த மேன்முறையீடு மற்றும் மீளாய்வு மனுக்கள் மீதான விசாரணை முடியும் வரை மேற்படி கட்டுமானத்துக்கு எதிரான இடைக்காலத் தடை தொடர்ந்து நீடிக்கும் என்று மேன்முறையீட்டுக்கான மேல் நீதிமன்றம் தன்னுடைய இன்றைய உத்தரவில் தெளிவாகக் கட்டளை பிறப்பித்திருக்கின்றது.
இந்த மீளாய்வு மனுத் தொடர்பாக பதில் மனுத் தாக்கல் செய்வதற்கு வாய்ப்பு அளித்து எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதிக்கு வழக்கு திகதியிடப்பட்டுள்ளது.அன்றைய தினம் மேன்முறையீட்டு மனுவும் தொடர்ந்து விசாரணைக்கு முன்னெடுப்பதா என்பது குறித்து தீர்மானிப்பதற்காக மன்றில் எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
