நாட்டின் உத்தியோகபூர்வ மொழியான பிரெஞ்சு மொழியைக் கற்றுக்கொள்வதை விட, நாட்டின் பூர்வீகக் குடிகளான பழங்குடி மக்களின் (Indigenous) மொழிகளைப் பாதுகாத்து வளர்ப்பதற்கே தாம் முன்னுரிமை அளிப்பதாக, கனடாவின் ஆளுநர் நாயகம் (Governor General) மேரி சைமன் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாட்டின் புகழ்பெற்ற கொள்கை ஆய்வுக்கான நிறுவனமான ‘Institute for Research on Public Policy நடத்திய மாநாட்டில் உரையாற்றிய நாட்டின் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளருமான லூயிஸ் ஆர்பர், ”கனடாவின் இருமொழிச் சட்டக் கட்டமைப்பில் (Bilingualism) பெரும் சீர்திருத்தம் தேவை” என வலியுறுத்தினார்.
நாட்டின் மிக உயரிய பதவிகளை வகிப்பவர்கள் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற பாரம்பரிய விதியைத் தளர்த்தி, பழங்குடி மொழிகளுக்கும் அதே அந்தஸ்தை வழங்க வேண்டும் என முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி லூயிஸ் ஆர்பர் (Louise Arbour) ஒரு பரிந்துரையை முன்வைத்திருந்தார்.
அந்தப் பரிந்துரைக்கு ஆளுநர் நாயகம் மேரி சைமன் தமது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
வரலாற்றில் முதன்முறையாகப் பழங்குடி இனத்தைச் (Inuk) சேர்ந்த ஒருவராக ஆளுநர் நாயகம் பதவிக்கு 2021 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட மேரி சைமனுக்குப் பிரெஞ்சு மொழி சரளமாகப் பேச வராது என்ற குற்றச்சாட்டு, கியூபெக் உள்ளிட்ட பிரெஞ்சு மொழி பேசும் பிராந்தியங்களில் தொடர் விவாதங்களை ஏற்படுத்தி வந்த பின்னணியிலேயே, அவருடைய இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
