கனடாவின் தொழிலாளர் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக, Air Canada விமான நிறுவனத்தின் விமானப் பணியாளர்கள் நடத்திய போராட்டம், தொழிலாளர் உரிமைகளுக்கு ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.
மத்திய அரசின் தலையீட்டை வெற்றிகரமாக எதிர்த்து, பேச்சுவார்த்தைக்குத் திரும்பச் செய்த அவர்களின் உறுதியான நடவடிக்கை, பிற தொழிற்சங்கங்களுக்கும் ஒரு உத்வேகத்தை அளித்துள்ளது.
சம்பள உயர்வு மற்றும் பணிச் சூழல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சுமார் 10,500 விமானப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் ஆரம்பித்து 12 மணி நேரத்திலேயே, கனடாவின் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பெட்டி ஹஜ்து, வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, கட்டாயத் தீர்ப்பாயத்துக்கு (binding arbitration) உத்தரவிட்டார்.
கடந்த காலங்களில் துறைமுகங்கள், ரயில்வே மற்றும் தபால் துறை ஊழியர்களின் வேலைநிறுத்தங்களை முடிவுக்குக் கொண்டு வரவே, இச்சட்டம் பயன்படுத்தப்பட்டிருந்தது.
தொழிலாளர் போராட்டத்தின் பயனாக, பணியில் சேர்ந்த முதல் ஐந்து ஆண்டுகளுக்கு 12% சம்பள உயர்வு, ஆறு ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ளவர்களுக்கு 8% சம்பள உயர்வு ஆகியவற்றை வழங்குவதற்கு, Air Canada விமான நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
