ஒன்ராறியோ மாகாணத்தில் முதன்மை சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்குடன், ஃபோர்ட்டின் அரசாங்கம் 235 மில்லியன்
டொலர்கள் புதிய நிதியை அறிவித்துள்ளது.
இந்த நிதி இந்த ஆண்டு மேலும் 300,000 ஒன்ராறியோ மக்களுக்கு முதன்மை சுகாதாரப் பராமரிப்பு வசதிகளைப் பெற்றுத்தர உதவும் என்று, மாகாண
சுகாதார அமைச்சர் சில்வியா ஜோன்ஸ் திங்கள்கிழமை அறிவித்துள்ளார். ஒன்ராறியோவில் தற்போது குடும்ப வைத்தியர் இல்லாதவர்களின்
எண்ணிக்கை 2.5 மில்லியனாக உள்ளதாகவும், இது 2026 ஆம் ஆண்டளவில் 4.4 மில்லியனைத் தாண்டும் என்றும் ஒன்ராறியோ மருத்துவ சங்கம் (Ontario
Medical Association) கவலை தெரிவித்திருந்தது.
இந்த அவசரத் தேவையைக் கருத்தில்கொண்டே புதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் விடுக்கப்பட்ட முன்மொழிவு அழைப்பின் (call for proposals) மூலம், முதன்மை சுகாதாரப் பராமரிப்பு வசதிகள் இல்லாத அதிக எண்ணிக்கையிலான குடியிருப்பாளர்களைக் கொண்ட சமூகங்களுக்கு
முன்னுரிமை அளித்து 130 முதன்மை பராமரிப்புக் குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்த குழுக்கள் அடுத்த சில வாரங்கள் மற்றும் மாதங்களுக்குள் நோயாளிகளை ஏற்றுக்கொள்ளத் தொடங்கும் என்று ஒன்ராறியோவின் முதன்மைப் பராமரிப்பு நடவடிக்கை குழுவின் (Primary Care Action team) தலைவர் கலாநிதி. ஜேன் ஃபில்போட் (Dr. Jane Philpott) தெரிவித்துள்ளார்.
இந்த புதிய நிதி, "முதன்மைப் பராமரிப்பு செயல் திட்டம் (Primary Care Action Plan) என்ற அரசின் பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இத்திட்டத்தின் கீழ், 2026 ஆம் ஆண்டிற்குள் ஒன்ராறியோவில் உள்ள ஒவ்வொருவரையும் பொது நிதியுதவி பெறும் குடும்ப வைத்தியர் அல்லது
முதன்மைப் பராமரிப்புக் குழுவுடன் இணைப்பதே இலக்கு என்று அமைச்சர் சில்வியா ஜோன்ஸ் கூறியுள்ளார்.
இந்த நிதியில் 142 மில்லியன் டொலர்கள் மூன்று ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்படும் நிதி ஒதுக்கீடாக சுகாதாரப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு
செய்வதற்கும், தக்கவைத்துக் கொள்வதற்கும் பயன்படுத்தப்படும். இதில் வைத்தியர்கள் அல்லாத குழு உறுப்பினர்களான தாதியர்கள், பதிவுசெய்யப்பட்ட நடைமுறைத் தாதியர்கள், வைத்தியர் உதவியாளர்கள், மருந்தாளுநர்கள் போன்றோருக்கான நிதியும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.