பாதுகாப்புக் கூட்டிணைவில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மேலும் ஆழமான உறவுகளைக் கனடா ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு மூலோபாய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக் கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கனடா பிரதமர் மார்க் கார்னி, கையெழுத்திட்டுள்ளார்.
இதன் மூலம், கனடா இனி அமெரிக்காவை இராணுவ உபகரணங்களுக்காக அதிகம் சார்ந்திருப்பதை குறைத்துக்கொள்ளும் ஒரு முக்கிய நடவடிக்கையை
அவர் மேற்கொண்டுள்ளார். இந்த ஒப்பந்தம், கனடிய நிறுவனங்களுக்கு 1.25 டிரில்லியன் யூரோ மதிப்புள்ள 'ரீஆர்ம் ஐரோப்பா' (ReArm Europe) திட்டத்தில், பங்கேற்க வழிவகை செய்துள்ளது.
அத்துடன், SAFE திட்டம் என அறியப்படும் ஒரு திட்டத்தின் கீழ், பிற நட்பு நாடுகளுடன் இணைந்து இராணுவ உபகரணங்களை வாங்குவதற்கும்
கனடா அரசாங்கத்திற்கு இது உதவும். இருப்பினும், இந்த அம்சங்கள் நடைமுறைக்கு வர இன்னும் மேலதிக பேச்சுவார்த்தைகளும், ஒப்பந்தங்களும் தேவைப்படும். கடந்த பல மாதங்களாகவே, கனடாவின் இராணுவ உபகரணங்களுக்கான ஒதுக்கீட்டில் சுமார் 70% அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட
தளவாடங்களுக்காக செலவிடப்படுவதில் தனது அரசாங்கம் அதிருப்தி கொண்டுள்ளதாக பிரதமர் கார்னி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத பிற நாடுகள் ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்துடன் தங்கள் மூலோபாய
ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன.
இந்த புதிய பங்காளித்துவம் நேட்டோ கூட்டணியைப் போல முழுமையானதாக இல்லாவிட்டாலும், டிரம்ப் நிர்வாகத்தின் நம்பகத்தன்மை குறித்த அதிகரித்து வரும் நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு இது முக்கியத்துவம் பெறுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த, ஒட்டாவா -கார்ல்டன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் துறையின் பேராசிரியர் ஸ்டீபன் சைட்மேன்,இது நேட்டோவுக்கு துணையாக அமையலாமே தவிர அதற்கு மாற்றான கூட்டிணைவு அல்ல என்று கூறியுள்ளார்.