கத்தாரின் அல் உதெய்ட் (Al Udeid) விமான தளத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை, கட்டாரின் வான் பாதுகாப்புப் படைகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளன.
சமீபத்தில் ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் மொத்தம் 19 குறுகிய தூர மற்றும் நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை அல் உதெய்ட் விமான தளத்தை நோக்கி ஏவியது.
கட்டாரின் மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள், ஏவப்பட்ட 19 ஏவுகணைகளில் 18 ஐ வெற்றிகரமாக இடைமறித்து சுட்டு வீழ்த்தியுள்ளன.
அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியதன் படி, இந்தத் தாக்குதலில் தளத்திற்குள் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. தாக்குதல் நடப்பதற்கு முன்னரே அல் உதெய்ட் விமான தளம் காலி செய்யப்பட்டிருந்ததாகவும், இது உயிர்ச்சேதம் ஏற்படாததற்கு ஒரு முக்கிய காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கப் படைகள் மீது அல் உதெய்ட் விமான தளத்தில் தாக்குதல் நடத்தியதை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது. ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய சமீபத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
தோஹாவிலிருந்து சுமார் 20 மைல் தென்மேற்கே அமைந்துள்ள அல் உதெய்ட் விமான தளம் ஆனது, அமெரிக்காவின் மத்திய கட்டளைப் படைக்கு (US Central Command – CENTCOM) ஒரு முக்கிய தலைமையகமாகச் செயல்படுகிறது. எகிப்து முதல் கஜகஸ்தான் வரையிலான ஒரு பரந்த பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை இது கண்காணிக்கிறது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவத் தளங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத் தக்கது.