தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கார்னி, கனடாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் தொடர்ச்சியான வர்த்தக பதட்டங்கள் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்திடமிருந்து வரக்கூடிய புதிய வர்த்தக தடைகள் முதலானவற்றுக்கு மத்தியில், அமெரிக்கா மீதான கனடாவின் சார்புநிலையை குறைப்பதற்கு மார்க் கார்னி உறுதியளித்தார்.
மாகாணங்களுக்கு இடையிலான வர்த்தகத்தை அதிகரிக்கவும், நூறாயிரக்கணக்கான வேலைகளை உருவாக்கவும், சுத்தமான மற்றும் வழக்கமான எரிசக்தி இரண்டிலும் கனடாவை ஒரு “எரிசக்தி வல்லரசாக” மாற்றவும் மார்க் கார்னியின் தரப்பு தேர்தல் பிரசார காலத்தில் உறுதியளித்திருந்தது.
இவை தொடர்பான, உடனடி நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்குமாறு, கனடா வணிக சபையின் தலைவர் கோல்டி ஹைடர் முதலான வணிகத் தலைவர்கள் ஆளும் தரப்பை வலியுறுத்துகின்றனர்
இதேவேளை, மேற்கு கனடாவுடனும், குறிப்பாக ஆல்பர்டாவுடன் கனேடிய மத்திய அரசாங்கத்துக்கு அரசியல் ரீதியான முரண் நிலை நிலவுகிறது.
இந்நிலையில், லிபரல் கட்சித் தலைவர் மார்க் கார்னி வசம் உள்ள, பொருளாதாரத் திட்டத்தின் வெற்றியே, இந்த அரசியல் பதட்டங்களைத் தணிக்க உதவும் என்று கூறப்படுகின்றது.