மொன்றியல் மாநகரத்தின் பிரதான போக்குவரத்துத் தூணாக விளங்கும் மெட்ரோ ரயில்வே கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக, காலை வேளையில் ரயில் சேவை நீண்ட நேரம் ஸ்தம்பித்தது.
இதனால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் தவிப்புக்குள்ளானதுடன், நகரின் மையப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசலும் குழப்ப நிலையும் ஏற்பட்டது.
மொன்றியல் போக்குவரத்து வாரியம் (STM) தனது முதன்மைப் பாதையான ‘லைன் 1’ இன் அங்ரிக்னான் (Angrignon) நிலையத்திலிருந்து பெரி-யூக்வாம் (Berri-UQAM) நிலையம் வரையிலான ரயில் சேவைகளை, இடைநிறுத்தியது.
லியோனல்-குரூக்ஸ் (Lionel-Groulx) சந்திப்பு நிலையத்திற்கு அருகில் தண்டவாளக் கட்டுப்பாட்டு உபகரணங்களில் ஏற்பட்ட சிக்கலான தொழில்நுட்பக் கோளாறே இந்த முடக்கத்திற்குக் காரணமெனத் தெரியவந்துள்ளது.
மொன்றியல் நிலத்தடி ரயில் சேவை முடங்கியதால், மாற்றுப் போக்குவரத்தைத் தேடி ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் வீதிகளைப் பயன்படுத்தியமை காரணமாக, கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
