நாட்டில் அமையவுள்ள புதிய சர்வதேச ‘பாதுகாப்பு வங்கி’யின் (Defence Bank) தலைமையகம் மொன்றியலில் அமைந்தால், அதன் தலைமை அதிகாரி கண்டிப்பாகப் பிரெஞ்சு மொழி தெரிந்தவராக இருக்க வேண்டும் என கியூபெக் மாகாண அரசு அதிரடி நிபந்தனை விதித்துள்ளது.
நேட்டோ (NATO) நாடுகளின் ராணுவ மற்றும் பாதுகாப்புத் திட்டங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்காக ‘பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் மீள்திறன் வங்கி’ (DSRB) என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
சுமார் 409 மில்லியன் டொலர் முதலீட்டில் தொடங்கப்படும் இந்த வங்கி ஆனது, நேட்டோ நாடுகளின் ஆயுதத் தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு உள்கட்டமைப்புகளுக்குக் குறைந்த வட்டியில் கடன் வழங்கவுள்ளது..
இந்த வங்கியின் தலைமையகம் அமைக்கப்படும் வாய்ப்பினை தம்பக்கம் இழுக்க மொன்றியல் மற்றும் டொராண்டோ நகரங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், நேற்று கருத்துத் தெரிவித்த கியூபெக் அமைச்சர் கிறிஸ்டோபர் ஸ்கீட், “மொன்றியலில் இந்த வங்கி அமைந்தால், அதன் தலைவர் பிரெஞ்சு மொழியில் சரளமாகப் பேசக்கூடியவராக இருக்க வேண்டும் என்பதில் தமது தரப்பு உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மொன்றியல் உலகின் இரண்டாவது பெரிய பிரெஞ்சு மொழி பேசும் நகரம் என்பதால், இங்கு அமையும் சர்வதேச அமைப்புகளின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் உள்ளூர் மொழியை மதிக்க வேண்டும் என, கியூபெக் மாகாண அரசு வாதிடுகிறது.
இதற்கிடையில், “கியூபெக்கில் கடுமையான மொழிச் சட்டங்கள் (Bill 96) அமலில் உள்ளன, எனவே அங்கு வங்கி அமைந்தால் நிர்வாகச் சிக்கல்கள் ஏற்படும்” என டொராண்டோ தரப்பு ரகசியமாகப் பரப்புரை செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
