கியூபெக்கில் வீட்டு உரிமையாளர்களின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தவும், வாடகைதாரர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் புதிய மற்றும் கடுமையான சட்டங்களைக் கொண்டு வரப்போவதாக ‘கியூபெக் சொலிடேர்’ (Quebec Solidaire) கட்சி அறிவித்துள்ளது.
மொன்றியலில் நேற்று நடைபெற்ற அக்கட்சியின் தேசிய மாநாட்டில், வீடமைப்பு தொடர்பான புதிய கொள்கை விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது.
அதன்படி, ஒருவேளைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், வாடகைதாரர்களைத் துன்புறுத்தும் அல்லது வீடுகளைச் சரியாகப் பராமரிக்காத உரிமையாளர்களுக்கு 2 லட்சம் டொலர் வரை அபராதம் விதிக்கப்படும் என அந்தக் கட்சி உறுதியளித்துள்ளது.
சட்டத்தை மீறும் தனிநபர் உரிமையாளர்களுக்கு 1 லட்சம் டொலரும், நிறுவனங்களுக்கு 2 லட்சம் டொலரும் அபராதம் விதிக்கப்படும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
மேலும் ‘திருத்த வேலைகள்’ (Renovations) என்ற பெயரில் வாடகைதாரர்களை வெளியேற்றிவிட்டு, பின்னர் அதிக விலைக்கு வாடகைக்கு விடும் முறையைத் தடுக்க கடுமையான விதிகள் கொண்டு வரப்படும் எனவும் ‘கியூபெக் சொலிடேர்’ (Quebec Solidaire) கட்சி கூறியுள்ளது.
