கியூபெக் மாகாணப் பொதுத்தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், மாகாணத்தின் இரு முக்கிய அரசியல் கட்சிகளான பார்ட்டி கியூபெகோவா (PQ) மற்றும் லிபரல் கட்சி ஆகியவற்றுக்கிடையே கடுமையான போட்டி நிலவுவதாகப் புதிய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இன்று வெளியான பல்லாஸ் டேட்டா(Pallas Data) மற்றும் சினோப்சிஸ் (Synopsis) ஆகிய இரு வேறுபட்ட கருத்துக்கணிப்புகளின் முடிவுகள், கியூபெக் தேர்தல் களம் ஒரு இறுக்கமான நிலையை எட்டியுள்ளதைக் காட்டுகின்றன. பார்ட்டி கியூபெகோவா கட்சியானது 29% முதல் 30% வரையிலான கியூபெக் மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. லிபரல் கட்சி 28% முதல் 30% வரையிலான கியூபெக் மக்களின் ஆதரவுடன் சம பலத்தில் உள்ளது.
பிரெஞ்சு மொழி பேசுபவர்கள் மத்தியில் பார்ட்டி கியூபெகோவா (PQ) கட்சி 35% ஆதரவுடன் முதலிடத்தில் உள்ளது. அதேவேளை, ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளைப் பேசுபவர்கள் மத்தியிலும், மொன்றியல் நகரப் பகுதிகளிலும் லிபரல் கட்சி பலத்துடன் விளங்குவது உறுதியாகியுள்ளது. கியூபெக் மாகாணத்தின் புதிய முதல்வர் கிறிஸ்டின் ஃப்ரெச்செட் (Christine Fréchette) தலைமையிலான ஆளுங்கட்சியான சி.ஏ.க்யூ (CAQ) கட்சி கடந்த சில மாதங்களாகப் பின்னடைவைச் சந்தித்திருந்தது. ஆனால், தற்போதைய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி அக்கட்சி 5 புள்ளிகள் உயர்ந்து 19% ஆதரவுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
தேர்தல் நெருங்கும் வேளையில், கியூபெக் மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களாக, சுகாதாரச் சீர்திருத்தம், வாழ்க்கைச் செலவு உயர்வு, வீட்டு வசதி தட்டுப்பாடு முதலான காரணிகள், இந்தக் கருத்துக் கணிப்புகளில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. லிபரல் கட்சியின் தலைவர் சார்லஸ் மில்லியார்ட் (Charles Milliard) தனதுகட்சியின் செல்வாக்கை மீண்டும் உயர்த்தியுள்ள நிலையில், பி.க்யூ கட்சியின் தலைவர் பால் செயின்ட்-பியர் பிளாமோண்டன் தனது பிரெஞ்சு மொழி ஆதரவு தளத்தைத் தக்கவைக்கப் போராடுவதாக, கருத்துக் கணிப்புத் தரவுகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
