கியூபெக் மாகாணத்தின் சுகாதாரத் துறையை நவீனப்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாக, டிஜிட்டல் சுகாதாரப் பதிவு திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக மொன்றியல் மற்றும் மோரிசி (Mauricie) ஆகிய இரு பிராந்தியங்களில் இந்த முன்னோடித் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மக்களின் மருத்துவ விபரங்களை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம், நோயாளிகள் ஒவ்வொரு முறை மருத்துவமனைக்குச் செல்லும்போதும் தங்களது முந்தைய மருத்துவக் குறிப்புகளை மீண்டும் மீண்டும் கூற வேண்டிய அவசியம் இருக்காது.
இரத்தப் பரிசோதனை முடிவுகள், எக்ஸ்ரே அறிக்கைகள் மற்றும் மருந்துச் சீட்டுகள் என அனைத்தும் ஒரே மின்னணு கோப்பில் சேமிக்கப்படும்வசதியை இத்திட்டம் ஏற்படுத்துகின்றது.
இதன்மூலம் மருத்துவர்கள் மிக விரைவாகவும் துல்லியமாகவும் சிகிச்சை அளிப்பதற்கு இந்தத்திட்டம் உதவும் என்று கூறப்படுகின்றது. இந்தத் திட்டத்திற்காக ஆரம்பத்தில் 1.5 பில்லியன் டொலர்கள் மதிப்பீடு செய்யப்பட்டது.
எனினும், தற்போது அதன் மொத்தச் செலவு 2.5 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது. இதற்காக எபிக் (Epic) எனும் உலகத்தரம் வாய்ந்த நவீன மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 120 மில்லியன் டொலர் வரையான நிதியை கியூபெக் அரசு சேமிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, புதிய டிஜிட்டல் முறையை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பழகிக்கொள்வதற்காக, மொன்றியல் மற்றும் மோரிசி (Mauricie) முதலான இரு பிராந்தியங்களிலும் அவசரமற்ற மருத்துவச் சேவைகள் தற்காலிகமாகக் குறைக்கப்பட்டுள்ளன.
இந்த முன்னோடித் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்துவரும் இரண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்குள், கியூபெக் மாகாணம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
