பிரசவித்த சில நிமிடங்களிலேயே குழந்தைகளைத் தாயிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிரிக்கும் நடைமுறைக்கு எதிராக, கியூபெக் மாகாண அரசு மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைப்புகள் (DPJ) மீது சிவில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
போதிய ஆதாரங்களின்றி குழந்தைகளைப் பறிப்பது மனித உரிமை மீறல் எனப் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் மொன்றியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
“பர்த் அலர்ட்” (Birth Alert) எனப்படும் எச்சரிக்கை முறையைப் பயன்படுத்தி, பல தாய்மார்களிடமிருந்து அவர்களது பச்சிளம் குழந்தைகள் பறிக்கப்படுவதாக இந்த வழக்கு கூறுகிறது.
குழந்தைக்கு உடனடி ஆபத்து இருக்கிறது என்பதற்கு எவ்விதத் தெளிவான ஆதாரமும் இன்றி, பிறந்த சில நிமிடங்களிலேயே அதிகாரிகள் குழந்தைகளைக் கொண்டு செல்கின்றனர்.
இந்த நடைமுறை குறிப்பாகக் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் பழங்குடியினத் தாய்மார்களையே அதிகம் இலக்கு வைப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு குறித்துக் கருத்துத் தெரிவிக்க மறுத்துள்ள கியூபெக் சுகாதாரத் துறை, “குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுகின்றன. வேறு வழியே இல்லாத இறுதி முயற்சியாகவே குழந்தைகள் பிரிக்கப்படுகிறார்கள்,” எனத் தெரிவித்துள்ளது.
