கியூபெக் மாகாணத்தில் கலப்படம் செய்யப்பட்ட மேப்பிள் சிரப்பினை விற்றுள்ள உற்பத்தியாளர் தமது சிரப் குறித்து தெரிவித்த கருத்துகள், இரகசிய கமெராவினூடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அந்த ஒளிப்பதிவுக் காட்சிகளில் அவர் தமது மேப்பிள் சிரப் குறைந்த விலையில் விற்கப்படுவதைக் குறித்துப் பெருமையாகப் பேசியுள்ளார்.
மற்றவர்களால் இவ்வளவு குறைந்த விலையில் மேப்பிள் சிரப்பினைக் கொடுக்க முடியாது எனவும் இது முழுமையாகச் சட்டப்பூர்வமானது அல்ல, என்றாலும் தாம் தப்பித்து விட்டதாகவும் அந்த உற்பத்தியாளர் கூறியுள்ளார்.
கியூபெக் மாகாணத்தின் புகழ்பெற்ற மேப்பிள் சிரப்பில் 50 சதவீதத்திற்கும் அதிகமான கரும்புச் சர்க்கரை கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கலப்படம் செய்யப்பட்ட மேப்பிள் சிரப்பினை ஆய்வுக்கு உட்படுத்திய ஆய்வக நிபுணர்கள், இது ஒரு தற்செயலான தவறு அல்ல எனவும் மாறாக இலாபத்திற்காகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட மோசடி எனவும் தெரிவித்துள்ளனர்.
கியூபெக் மேப்பிள் சிரப் வரலாற்றில் இவ்வளவு பெரிய மோசடி கண்டறியப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இது தொடர்பாக மொன்தெரேஜி பிராந்தியத்தைச் சேர்ந்த உற்பத்தியாளர் ஸ்டீவ் பூர்டோ (Steve Bourdeau) மீது பாரிய நட்டஈடு கோரி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த மோசடியால் பாதிக்கப்பட்ட நுகர்வோர் சார்பில் கியூபெக் உயர் நீதிமன்றத்தில் Class-action எனப்படும் ‘வகுப்பு-நடவடிக்கை’ வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த சிரப்பை வாங்கிய ஒவ்வொரு நுகர்வோருக்கும் 100 டாலர்கள் நட்டஈட்டினை அந்த உற்பத்தியாளர் வழங்க வேண்டும் என, இந்த வழக்கின் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இத்தகைய மோசடிகள் கியூபெக் மாகாணத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாக மேப்பிள் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் கவலை தெரிவித்துள்ளது.
