மொன்றியலின் தெற்கு கரை (South Shore) பகுதியில் அமைந்துள்ள லோங்குயில் (Longueuil) நகரில் நேற்று மாலை ஏற்பட்ட பாரிய புல்வெளித் தீயினால் (Grass Fire), ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் இருந்து பல குடும்பங்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
வரட்சியான காலநிலை மற்றும் பலத்த காற்றினால் இந்தத் தீ வேகமாகப் பரவியதாகக் கூறப்படுகின்றது.
குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் தீ பரவத் தொடங்கியதும், பாதுகாப்பு கருதி பல வீடுகளில் இருந்த மக்கள் உடனடியாக வெளியேறுமாறு பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டனர்.
லோங்குயில் தீயணைப்புப் படையினர் பல மணிநேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இரவு 10 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்ட பின்னரே மக்கள் மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
தீயினால் மின்சாரக் கம்பங்கள் மற்றும் வயர்கள் சேதமடைந்ததால், ஹைட்ரோ-கியூபெக் (Hydro-Québec) நிறுவனம் மின் விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்தியது.
இந்தத் தீ விபத்தின் காரணமாக, மொன்தெரேஜி (Montérégie) பிராந்தியத்தில் சுமார் 15,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மின்சாரமின்றிப் பாதிக்கப்பட்டனர்.
சேதமடைந்த மின்கம்பங்களைச் சீரமைக்கும் பணியில் ஹைட்ரோ-கியூபெக் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டனர்.
தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
