ஐரோப்பிய நாடுகளுக்கான உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள கனேடியப் பிரதமர் மார்க் கார்னி, எதிர்வரும் திங்கட்கிழமை லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் மூன்றாம் சார்லஸைச் சந்தித்து உரையாடவுள்ளார்.
நோர்வேயில் நடைபெற்ற நேட்டோ இராணுவப் பயிற்சிகளைப் பார்வையிட்ட பிறகு லண்டன் செல்லும் பிரதமர், ஆர்க்டிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் குறித்து மன்னருடன் விரிவாக ஆலோசிக்கவுள்ளார்.
கடந்த ஆண்டு மன்னர் சார்லஸ் கனடா வந்து நாடாளுமன்றத்தைத் தொடங்கி வைத்ததன் தொடர்ச்சியாக இந்தச் சந்திப்பு பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா போன்ற நாடுகளின் ஆதிக்கம் அதிகரித்து வரும் சூழலில், கனடாவின் தனித்துவமான அரசியல் அடையாளம் மற்றும் இறையாண்மையை (Sovereignty) உலகிற்குப் பறைசாற்றும் ஒரு முயற்சியாக இந்த இராஜதந்திர நகர்வு கருதப்படுகிறது.
மன்னருடனான சந்திப்பைத் தொடர்ந்து, பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மரை (Keir Starmer) அவரது இல்லத்தில் மார்க் கார்னி சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
