ஆர்க்டிக் (Arctic) மற்றும் வடமுனைப் பகுதிகளின் பாதுகாப்பை வலுப்படுத்தவும், அங்குள்ள உட்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் 3,500 கோடி டொலர் மதிப்பிலான மாபெரும் திட்டத்தைப் பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
“எமது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க இனி நாம் மற்ற நாடுகளைச் சார்ந்திருக்க மாட்டோம்” என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
சர்வதேச அளவில் ஆர்க்டிக் பிராந்தியத்தைக் கைப்பற்ற ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் ஆர்வம் காட்டி வரும் சூழலில், கனடா தனது சொந்தப் பாதுகாப்பைத் தானே உறுதி செய்ய வேண்டியது அவசியம் எனப் பிரதமர் வலியுறுத்தினார்.
இந்த அறிவிப்பின்படி, சுமார் 3,200 கோடி டொலர் நிதி ஆனது, நோராட் (NORAD) மற்றும் வடமுனை இராணுவத் தளங்களை நவீனப்படுத்த ஒதுக்கப்பட்டுள்ளது.
யெல்லோநைஃப், இனுவிக், இக்காலுவிட் மற்றும் கூஸ் பே ஆகிய இடங்களில் உள்ள இராணுவத் தளங்கள் எஃப்-35 (F-35) ரக போர் விமானங்களை ஆண்டு முழுவதும் இயக்குவதற்கு ஏற்றவாறு தரம் உயர்த்தப்படும்.
வைட்ஹார்ஸ் (Whitehorse) மற்றும் ரெசலூட் (Resolute) ஆகிய இடங்களில் புதிய இராணுவ மையங்களும், கேம்பிரிட்ஜ் பே மற்றும் ரேங்கின் இன்லெட் ஆகிய இடங்களில் சிறிய கண்காணிப்பு நிலையங்களும் அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
