ஹாலிஃபாக்ஸில் உள்ள கனடியக் குடியேற்ற அருங்காட்சியகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) மேரி சாப்மன் (Marie Chapman) மீது, அரசுப் பணியாளர் நடத்தை விதியை கடுமையாக மீறியதாக, குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பொதுத்துறை நேர்மைக்கான ஆணையத்தின் விசாரணையிலேயே, இந்த குற்றம் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
ஊழியர்களை அதிக சத்தத்துடன் திட்டுதல், தவறான மற்றும் பொருத்தமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துதல், மற்றும் தனது உயர்நிலைக் குழு உறுப்பினர்களைப் பொதுவில் தரக்குறைவாகப் பேசுதல் போன்ற செயல்களில் மேரி சாப்மன் ஈடுபட்டதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் மீதான இந்த செயற்பாடுகளை அவர் கடந்த பத்து ஆண்டுகளாக மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது நடத்தையானது கனடியக் குடியேற்ற அருங்காட்சியகத்தின் ஊழியர்களுக்கு உணர்ச்சி ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியது என்றும், அவர்களில் சிலர் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் இருந்ததாகவும் அறிக்கை கூறுகிறது.
இது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல என்றும், பொதுத்துறை மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் ஒரு நீண்டகாலப் பிரச்சினை என்றும் மத்திய அரசின் பொதுத்துறை நேர்மைக்கான ஆணையம் தெரிவித்துள்ளது
