கனடாவில் சட்டவிரோத புகையிலை கடத்தல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், ஒன்ராறியோ மாகாணத்தைச் சேர்ந்த நான்கு ஆண்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தக் கடத்தல் நடவடிக்கையின் பின்னணியில் புதிய சட்டவிரோத புகையிலை உற்பத்தித் தொழிற்சாலை ஒன்று மேற்கு கனடாவில் இயங்குகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
குறிப்பாக, ரயில் பாதையைப் பயன்படுத்தி சட்டவிரோத புகையிலையை கனடாவின் பிரெய்ரி மாகாணங்களுக்குக் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் சம்பவம், அந்நாட்டின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களின் நடவடிக்கைகள் தொடர்பில் புதிய கேள்விகளை உருவாக்கியுள்ளது.
முன்னாள் ஒன்ராறியோ மாகாண பொலிஸ் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு விசாரணை அதிகாரியான ரிக் பார்னம், இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்களைக் கேட்டதும், கடத்தல் நடவடிக்கையின் பின்னணியில் இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து கவனம் செலுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
கடத்தப்பட்டதாகக் கூறப்படும் மூல இலைப் புகையிலை மேற்கு கனடாவுக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தால், அங்கு சட்டவிரோத புகையிலை உற்பத்தித் தொழிற்சாலை ஒன்று இயங்குவதற்கான சாத்தியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மேற்கு கனடாவில் இவ்வாறான தொழிற்சாலை ஒன்று உண்மையில் இயங்கினால், அது சட்டவிரோத புகையிலை வியாபாரத்தின் தற்போதைய நிலைமையை முற்றிலும் மாற்றக்கூடிய முக்கியமான வளர்ச்சியாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கனடாவில் சட்டவிரோத புகையிலை கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ரயில் போக்குவரத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் இந்தக் கடத்தல் சம்பவம் பாதுகாப்புத் துறையினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
