கியூபெக் மாகாணத்தின் சுகாதாரத் துறையைக் கண்காணிக்கும் ‘சான்டே கியூபெக்’ (Santé Québec) அமைப்பின் உயர் நிர்வாகிகளை அகற்றவும், அந்த அமைப்புக்கு வழங்கப்பட்டிருந்த மகுட நிறுவன (Crown corporation) அந்தஸ்தை ரத்து செய்யவும் கியூபெக் அரசு திட்டமிட்டுள்ளது.
மாகாணத்தில் நிலவும் அதிகப்படியான நிர்வாகச் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் மூலம் சுமார் 40 மில்லியன் முதல் 100 மில்லியன் டொலர் வரை சேமிக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பார்ட்டி கியூபெக்வா (PQ) கட்சி அரசாங்கம் இந்த அமைப்பை ஒரு “அதிகாரத்துவ அரக்கன்” (bureaucratic monster) என வர்ணித்துள்ளதுடன், அதன் மிகைப்படுத்தப்பட்ட மற்றும் மையப்படுத்தப்பட்ட நிர்வாகக் கட்டமைப்பை முற்றிலும் மாற்றியமைக்கப் போவதாகவும் அறிவித்துள்ளது.
எனினும், மாற்றத்துக்கான சிறந்த திட்டத்தை வகுப்பதற்காக, கியூபெக் அரசு மேலும் ஆறு மாத காலத்தை எடுத்துக் கொள்ளவுள்ளது.
அரசின் இந்த காலதாமதக் காலக்கெடுவிற்கு லிபரல் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடமிருந்து கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
எதிர்க்கட்சிகள் இது குறித்து கூறுகையில், நோயாளிகளின் நலனைக் கவனிக்க வேண்டிய நேரத்தில், கட்டமைப்பு விவாதங்களால் ஆறு மாத காலத்தை வீணடிக்கக் கூடாது எனச் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
