மொன்றியல் மாநகரப் பகுதியில் குடியிருப்பு வீடுகளுக்கான மாதாந்த வாடகைத் தொகை முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.
இது இங்கு வாழும் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பெருமளவில் பாதிப்படையச் செய்துள்ளது.
கனடா வீடமைப்பு மற்றும் அடமானக் கூட்டுத்தாபனம் (CMHC) வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்களின்படி, மொன்றியலில் இரண்டு படுக்கையறைகளைக் கொண்ட ஒரு சாதாரண குடியிருப்பின் சராசரி மாதாந்த வாடகை 1,900 டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
சர்வதேசக் குடியேற்றவாசிகளின் வருகை, பல்கலைக்கழக மாணவர்களின் தேவை மற்றும் இளம் தொழில் வல்லுநர்களின் போட்டி ஆகிய காரணங்களால் வீடுகளுக்கான தட்டுப்பாடு அதிகரித்தமையே, இந்த விலை உயர்வுக்கு காரணமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
மொன்றியலின் ஒட்டுமொத்த காலி வீடுகளின் வீதம் (Vacancy Rate) வெறும் 2.2% ஆகக் குறைந்துள்ளதால், வாடகைக்குடியிருப்பாளர்கள் புதிய வீடுகளைத் தேடிப் பெறுவதில் கடும் நெருக்கடியை எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
