கியூபெக் மாகாணத் தேர்தல் பிரசாரங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், மாகாண அரசின் வரவுசெலவுத் திட்டத்தில் கலை மற்றும் கலாசாரத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை 3 சதவீதமாக உயர்த்த வேண்டும் என ‘கல்ச்சர் மொன்றியல்’ (Culture Montréal) அமைப்பு கியூபெக் அரசிடம் வலியுறுத்தியுள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகக் கலைத் துறைக்கு 2 சதவீதத்திற்கும் குறைவான நிதியே ஒதுக்கப்பட்டு வந்துள்ள நிலையில், இத்துறை எதிர்கொண்டு வரும் நெருக்கடிகளைச் சமாளிக்க இத்தொகையை அடுத்த நான்கு ஆண்டுகளில் 3 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இமானுவேல் ஹெபர்ட் (Emmanuelle Hébert) தெரிவித்துள்ளார்.
கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நிலவி வரும் வர்த்தக உறவுச் சிக்கல்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவின் (AI) விரைவான வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, கியூபெக்கின் கலாசாரப் பாதுகாப்பிற்குத் தீவிர நடவடிக்கைகள் தேவை என்பதை வலியுறுத்தி 37 பரிந்துரைகள் அடங்கிய புதிய அறிக்கையை கல்ச்சர் மொன்றியல் வெளியிட்டுள்ளது.
கனடா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் கியூபெக்கின் கலாசார இறைமை முக்கிய காரணியாக அமைந்துள்ள நிலையில், அதற்குப் பொருத்தமான நிதி ஆதாரங்களை மாகாண அரசு வழங்க வேண்டும் என ஹெபர்ட் சுட்டிக்காட்டினார்.
மேலும், சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளில் இருந்து கலாசார நடவடிக்கைகள் மற்றும் சேவைகளுக்கு விலக்கு அளிக்கும் நிலைப்பாட்டை அரசுகள் உறுதியாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

