மொன்றியல் மாநகர சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் சில சட்டங்கள் (Bylaws), பொலிஸாரின் செயற்பாட்டில் இனப்பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக மொன்றியல் பொலிஸ் மா அதிபர் ஃபாடி தாகர் (Fady Dagher) பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்தச் சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
பொது இடங்களில் நடமாடுதல், சத்தமிடுதல் அல்லது பூங்காக்களில் தங்குதல் தொடர்பான சில பொதுவான சட்டங்கள் ஆனவை, பொலிஸார் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் குறிவைத்துத் தடுத்து நிறுத்துவதற்கு (Street Checks) ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இச்சட்டங்கள் தெளிவற்ற முறையில் இருப்பதால், பொலிஸார் தமது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தவும், குறிப்பாக சிறுபான்மையினரைத் தேவையின்றி இடைமறிக்கவும் இது வழிவகுக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘கியூபெக் கறுப்பினத்தவர் சங்கம்’ போன்ற அமைப்புகள் இத்தகைய சட்டங்களை உடனடியாக நீக்க வேண்டும் அல்லது திருத்த வேண்டும் என நீண்டகாலமாகப் போராடி வருகின்றன.
பொலிஸாரின் செயற்பாடுகளில் இனப்பாகுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக 2026 முதல் 2030 வரையிலான ஐந்து ஆண்டுத் திட்டத்தை பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில், பொலிஸ் அதிகாரிகள் மீது சுமத்தப்படும் இனப்பாகுபாடு தொடர்பான புகார்களைக் கண்காணிக்க ஒரு புதிய மையப்படுத்தப்பட்ட தரவுத்தளம் உருவாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
